திமுக அரசு விரைவில் டிஸ்மிஸ் ஆகும்- ஜெயக்குமார்
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வளர்மதி, பொன்னையன் உள்ளிட்டோருடன் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் விடியா திமுக ஆட்சி வீழ்ந்து போகும் நாளே மக்களுக்கு மிகப்பெரிய தீபாவளி. விரைவில் தமிழகத்திற்கு நல்ல செய்தி, இந்த விடிய திமுக அரசு விரைவில் டிஸ்மிஸ் ஆகும். தூர்வாருவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.5,000 கோடி என்னவானது என தெரியவில்லை. தமிழகத்தில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி விடியா திமுக ஆட்சி தான்.

அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டு, அதே திட்டத்தை வேறு பெயரில் கொண்டுவருகின்றனர். திமுகவில் சீனியர்களை ஒதுக்கிவிட்டு செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் என்ன? தங்கை கனிமொழி கைதான போது நேரில் சந்திக்காதவர், செந்தில் பாலாஜி கைதானதும் ஓடோடி சென்று பார்க்கிறார். இருதய அடைப்பு என்று கூறியவர் ஸ்டாலினை கண்டதும் எழுந்து அமர்ந்து பேசுகிறார். விடியா திமுக ஆட்சி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் செந்தில்பாலாஜியை காப்பாற்ற துடிப்பது ஏன்? அரசு ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை இன்று வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்” எனக் கூறினார்.


