மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அச்சரப்பாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்காக சுமார் 45 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5 ஆயிரம் பேருக்கு அனுமதி
முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 5 ஆயிரம் பேருக்கு கியூஆர் குறியீடு கொண்ட அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பொதுக்கூட்டத்தை அனைவரும் எளிதாக காணும் வகையில் 10-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை
பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக மதுராந்தகம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய்க்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுராந்தகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தனது தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சர் விஜயின் வருகையையொட்டி மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
