திமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தில் நிறைய பேர் சிக்குவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் , அண்ணா நகர் மேற்கு, பாடி, கொரட்டூர் அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அதிமுக சார்பாக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான அலெக்ஸாண்டர் தலைமையில் தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு பழ வகைகள் குளிர்பானம், மோர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறுகையில்,
திமுக ஆட்சியில் மக்கள் சூடாக இருப்பதால் கோடை காலத்தில் தண்ணீர் பந்தல்களை திறந்து உடலுக்கு சத்தான குளிர்ச்சியான ஆகாரங்களை வழங்குகிறோம். மெரினா லூப் சாலை, பட்டினம் பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு என்று சொல்லி கடைகள் அகற்றப்படுவது மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் பட்டினம்பாக்கம் மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. திமுக அரசு மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றார் ஜெயக்குமார்.
ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுவதாக மக்கள் தொடர்ந்து புகார் அளிக்கிறார்கள். திமுக அரசு பால் விற்பனையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காலை 11 மணிக்கு நிறைய இடங்களில் பால் பாக்கெட் கொடுப்பதால் பால் கெட்டுப் போய்விடுகிறது என்றார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து 16ம் தேதி நடக்கும் அதிமுக செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மேலும், திருச்சியில் ஓபிஎஸ் நடத்தும் பொதுக்கூட்டம் அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இப்போது குழுவாக செயல்படக்கூடிய ஓபிஎஸ் விரைவில் தனிக்கட்சியை தொடங்கலாம் ஆனால், ஆயிரம் ஆண்டுகள் அதிமுக நிலைத்து நிற்கும் என ஜெயக்குமார் கூறினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை நாளை வெளியிடுவதாக கூறியுள்ளார். மேலும், மத்திய அரசின் வசம் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக அமைச்சர்களின் இல்லங்களில் சோதனை செய்ய சொன்னால் நிறைய அமைச்சர்கள் சிக்குவார்கள் என ஜெயக்குமார் கூறினார்.
மேலும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்ற விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு குறித்த கேள்விக்கு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் நேரடியாக அரசியலுக்கு வந்தால் தான் அரசியலில் இருக்கும் கஷ்டங்கள் என்ன என்று தெரியும் என்றார் ஜெயக்குமார்.