கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி மதுரை மாவட்டம்செக்கானூரணியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆங்கிலேயர் காலம் முதல் கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலைக் கள்ளர் சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணர்ந்து, எளிய பொருளாதார நிலையிலும் தங்களுக்கு தாங்களே “கள்ளர் காமன் பண்ட்” மூலமாகவும் தங்கள் நிலங்களையும், கடும் உழைப்பையும் கொடுத்து அமைத்துகொண்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாகத்தை பிற்பட்டோர் நலத்துறையிடமிருந்து இருந்து, பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து கடந்த 17ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
அந்த அறிக்கையில், அரசின் இந்த நடவடிக்கையினால், இதுவரையில் இச்சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்வி கற்கக்கூடிய தளங்கள், வேலைவாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற பல அடிப்படை உரிமைகள் பறிபோகும் என்பதால், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாகக் கைவிடாவிடில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று எச்சரித்திருந்தேன்.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாக முறையை மாற்றும் போக்கில் இருந்து திமுக அரசு மாறுவதாகத் தெரியவில்லை. எனவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாவட்டம் செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.