திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றத் தலையீட்டால் மாநில அரசின் உரிமைகள் பறிபோயுள்ளதாகவும், இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை என்றும் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நீதித்துறை வரம்பு மீறலால் (Judicial Overreach) மாநில அரசின் உரிமைகளும், பல்லாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு முறைகளும் பறிபோயுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? வார இறுதி விடுமுறை முடிந்து திங்கட்கிழமை வந்தாலாவது அவர் இதுபற்றிப் பேசுவாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரிகள் மீது பழி சுமத்துவதாக விமர்சனம்:
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்கள் மீது பழி சுமத்துவதே தற்போதைய முதலமைச்சரின் நிர்வாக அணுகுமுறையாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
ஒரு மாவட்ட ஆட்சியரை கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் முதலமைச்சரின் நிர்வாகச் சாதனை என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளுக்கும் கேள்வி:
மேலும், முதலமைச்சரைப் புகழ்ந்து பேசி இரவோடு இரவாகக் கூட்டணி மாறிய கட்சிகள், தற்போது அவரிடம் எந்தக் கருத்தையும் அல்லது பொறுப்புக்கூறலையும் கோராமல், எதிர்க்கட்சியான திமுகவை மட்டும் கேள்வி கேட்பது ஏன் என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார்.
மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம்:
நீதித்துறை வரம்பு மீறலால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க அரை நூற்றாண்டு காலமாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி களத்தில் நின்ற இயக்கம் திமுக என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுகவுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்றும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்ட திமுக என்றென்றும் உறுதியாகப் போராடும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
