Homeசெய்திகள்அரசியல்ஆபாசக் குறுஞ்செய்திக்கு 13 போலீஸ் பாதுகாப்பா? 117 நாள் சிந்தனையா? – சுப.வீரபாண்டியன் சரமாரி விமர்சனம்!

ஆபாசக் குறுஞ்செய்திக்கு 13 போலீஸ் பாதுகாப்பா? 117 நாள் சிந்தனையா? – சுப.வீரபாண்டியன் சரமாரி விமர்சனம்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரம், மின்சாரக் கொள்முதல், லஞ்சப் புகார் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தற்போதைய ஆட்சி நிர்வாகத்தையும், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளையும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், ஆட்சி நிர்வாகம், சட்டம் – ஒழுங்கு, மின்சாரக் கொள்முதல், இருமொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

13 போலீசார் பாதுகாப்பு ஏன்?:

பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு 13 காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருப்பது தமிழ்நாட்டுக்கே அவமானம் என்று சுப.வீரபாண்டியன் விமர்சித்தார்.

கடந்த ஜூலை மாதமே புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 117 நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் சிந்தித்துக் கொண்டிருப்பதாகக் கூறுவது வியப்பளிக்கிறது என்றார். இந்த விவகாரத்தைத் தனிப்பட்ட பிரச்சினையாகக் கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து குறித்தும் விமர்சனம்:

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நிகழ்ந்து 22 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அதனை நினைத்துப் பதறுவதாக முதல்வர் பேசியிருப்பதையும் அவர் விமர்சித்தார்.

சட்டமன்றத்தில் கைகட்டிக்கொண்டு அமர்ந்திருப்பேன் என்று கூறுவதைவிட வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

மின்சாரக் கொள்முதலில் முறைகேடு புகாரா?:

மற்ற மாநிலங்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்கும் நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு யூனிட் ரூ.37 என்ற அதிக விலையில் மின்சாரம் வாங்க முடிவு செய்திருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

துறையூர் மற்றும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விவகாரங்களையும் சுட்டிக்காட்டிய அவர், ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க வந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், லஞ்சம் கொடுக்க வந்தவர்கள் யார் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இருமொழிக் கொள்கை குறித்து போராட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு வழங்கும் செலுத்துகைச் சீட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருப்பதாகக் கூறிய சுப.வீரபாண்டியன், இது தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு முரணானது என்று விமர்சித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நவம்பர் 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்குப் பாராட்டு:

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராகவும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட சுப.வீரபாண்டியன், அறிவுத் திருவிழா, முத்தமிழ் அறிஞர் பதிப்பகம், கொள்கைப் பயிற்சிப் பாசறைகள் ஆகியவற்றின் மூலம் திராவிடக் கொள்கைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதாகப் பாராட்டினார்.

மேலும், கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக தலைவர் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என்றும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள உதயநிதி ஸ்டாலினே பொருத்தமானவர் என்றும் தனது கருத்தைத் தெரிவித்தார்.

“கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட்டால் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி; 6 தொகுதிகளிலும் திமுக வெல்லும்”: வல்லம் பஷீர் 

 

MUST READ