spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு - பண்ருட்டி ராமச்சந்திரன்

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

-

- Advertisement -

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு ‘நீதிமிக்க சமுதாயத்தை’ (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். ‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு - பண்ருட்டி ராமச்சந்திரன்

முன்னாள் அமைச்சரும் தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், “எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

we-r-hiring

புதிய கட்சியின் நோக்கங்களை விளக்கி அவர் பேசியபோது, “இன்றைய அரசியல் அடையாள அரசியலையும் கொள்கை அரசியலையும் மையமாகக் கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையில் யாருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது. திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் ‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு” என்றார். அரசியல் இன்று வணிகமாக மாறிவிட்டதாகவும், அதை அறவழியில் மாற்றவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பேசிய அவர், இந்த இயக்கம் உடனடியாகத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்துடன் தொடங்கப்படவில்லை என்றார். “இது ஒரு நீண்ட அரசியல் பயணம். தேர்தல் என்பது அந்தப் பயணத்தில் வரும் ஒரு சடங்கு மட்டுமே. எங்களது கொள்கைகளுக்கு உடன்படுபவர்களைத் தேர்தலில் ஆதரிப்போம்” என்று கூறினார். அதே நேரத்தில், வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் நடிகர் விஜய் இடையே தான் முக்கிய போட்டி நிலவும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. தனிப்பட்ட நபருக்காக அரசியலில் வாழ்நாளை வீணாக்க முடியாது. அரசியல் என்பது மக்களுக்கானது” என்றார். நாட்டில் பல பிரச்சினைகள் உள்ள நிலையில், ஒரே நபரை மையமாக வைத்து அரசியல் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் கருத்து தெரிவித்தபோது, “அவருக்கு பின்னணி இல்லாதது ஒரு வகையில் சாதகமே. முன்னோர்கள் செய்த தவறுகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏப்ரல் மாதத்தில் அவரது தாக்கம் குறித்து விரிவாக பேசுவேன். அவருக்கு கூடும் கூட்டங்கள் அவரது உழைப்பிற்கான பலன்” என்றார்.

“எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவிற்கும் தற்போது உள்ள அதிமுகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார். நீண்ட காலமாக அதிமுக, தேமுதிக மற்றும் ஓபிஎஸ் அணியில் இருந்து தாம் நினைத்த மாற்றங்களைச் செய்ய முடியவில்லை என்பதாலும் புதிய கட்சி தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் கூறினார்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தாரக மந்திரத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தின் முறையான தொடக்க விழா பிப்ரவரி 23ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கட்சியின் விரிவான கொள்கைகளும் செயல் திட்டங்களும் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கட்சி அறிவிப்பு கூட்டத்தில் எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தாலும், ஜெயலலிதா அவர்களின் படம் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “இவர்கள் இருவர் மட்டும் போதாதா?” என்று அவர் பதிலளித்தார்.

மேலும், கருப்பு–வெள்ளை–சிவப்பு ஆகிய மூன்று நிறங்களைக் கொண்ட கட்சிக் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். கொடியில் எம்.ஜி.ஆர் அல்லது அண்ணா படங்கள் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “கொடி என்பது எளிமையாக இருக்க வேண்டும். மக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும்” என்றார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுக உருவானபோது எளிய வடிவிலான இரு வண்ணக் கொடியை உருவாக்கிய மரபை அவர் நினைவூட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்த ஆர்.வி. ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சியில் இணைந்தனர்.

பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!

MUST READ