தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே வெள்ளியங்கிரியில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.


கோவையில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, பிரேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டதன் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்:- வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென பங்கேற்றுள்ளார். இதனால் அதிமுக உடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு விட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிகழ்வு தேமுதிக மீதான நம்பகத்தன்மையை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது என்பதை பிரேமலதா உணர்ந்துகொள்ள வேண்டும்.
முப்படை தளபதிகளை அழைத்துவந்து ராணுவ வீரர்களுக்கு பரம்வீர் சக்ரா விருதை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குவதை பார்த்தோம். குடியரசுத் தலைவர் மாளிகையில் கொடுக்க வேண்டிய விருதுகளை ஜக்கி முன்னிலையில் வழங்குகிறார் என்றால், பாதுகாப்புத்துறை எந்த அளவுக்கு ஊழல் நிறைந்ததாகவும், அதில் எந்த அளவுக்கு இவர்கள் எல்லாம் தொடர்பு பெற்றவர்களாக இருக்கலாம் என்பது நமக்கு தெரிகிறது. ஊழல்வாதிகள், மத்திய அரசின் விசாரணை முகமைகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக தாங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை சாமியார்களிடம் கொண்டுபோய் கொடுப்பார்கள். ஜக்கியிடம் வேலுமணி பவ்யமாக பணிந்து இருக்கிறபோதே அது தெரிகிறது.

இந்த நிலையில், ஜக்கியின் ஈஷா யோகா மையத்திற்கு பிரேமலதா விஜயாகந்த் சென்றிருப்பது கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தான் என்பது வெள்ளிடைமலையாக தெரிகிறது. வெறுமனே கூட்டணி பேரம் என்றால் கட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பேசுவார்கள். ஆனால் பண பேரம் என்றால் இப்படிபட்ட சாமியார்கள் உதவுவார்கள். எனவே பண பேரத்திற்கு பிரேமலதா முக்கியத்துவம் அளித்துள்ளார் என்கிற சந்தேக பார்வையை அவர் மீது எழுப்புவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் அதிமுக உடன் நெருக்கம் காட்டுகிறார். என்டிஏவில் இணையப் போகிறார் என்பதன் சமிக்ஞையாக தான் நாம் அதை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
பேரங்கள் முடிந்திருக்கலாம். பணப் பரிமாற்றங்கள் நடந்த உடன், இந்த பேரங்கள் வெளிப்படையாக கூட்டணி அறிவிப்புகளாக வரலாம். அதுதான் நடைபெறும். பிரேமலதாவின் பலவீனம் என்பது எப்போதும் முடிவை தாமதப்படுத்தி நம்பகத்தன்மையை இழந்து அறிவித்ததால்தான் எல்லா தேர்தல்களில் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதற்கான காரணமாகும். பிரேமலதாவின் தாமதத்திற்கு காரணம் பணம் தான் என்று மக்கள் மத்தியில் வெளிப்படையாக தெரிந்து, அவர்களிடம் செல்வாக்கை இழக்கிறார்கள்.

பிரேமலதா ஈஷாவுக்கு சென்று வந்துள்ளதன் மூலம் அதிமுக, தேமுதிக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்து, தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளார். அதற்கான களத்தை அமைக்க பாஜக, ஆர்எஸ்எஸ்ன் கருணையும் தயவும் வேண்டும். அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால் நாக்பூர், பாஜக காலில் விழுந்துதான் ஆக வேண்டும். ஜெயலலிதா மூலமாக அமைச்சர் பதவிக்கு வந்தாகி விட்டது. பதவிக்கு வந்ததால் கோடிக்கணக்கில் பணம் சேர்த்தாகிவிட்டது. இனி அதை எப்படி பாதுகாப்பது, அதன் மூலம் எப்படி அடுத்த பதவிகளை பெறுவது என்பது தான் அடுத்த விஷயம். எடப்பாடியை காலி செய்துவிட்டு எப்படி அவர் இடத்திற்கு வருவது என்று தான் யோசிப்பார்கள். இல்லாவிட்டால் அடுத்த 5 வருடத்திற்கு அவர் எடப்பாடிக்கே சாமரம் வீசிக் கொண்டிருக்க வேண்டும்.

அதிமுகவில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால் அதற்கு பாஜக தலைமையின் சம்மதம் வேண்டும். அதிமுகவின் தலைமை அமித்ஷா தான். எப்படி தலைமை தேர்தல் ஆணையர் அமித்ஷாவோ, அதேபோல் அதிமுகவின் தலைவரும் அவர்தான். எடப்பாடி பழனிசாமியே அங்கே தான் எல்லா விஷயங்களையும் கேட்கிறார். இங்கே வந்து பேசுகிறாரே தவிர, அவர்கள் தானே முழுக்க முழுக்க ஆட்டுவிக்கிறார்கள். அமித்ஷாவுக்கு தன்னுடைய பதவியை விட, கட்சிக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம், அதிமுக, கூட்டணி கட்சிகளை சமாளிப்பதுதான் முக்கிய பொறுப்பாக உள்ளது. உள்துறை அமைச்சரான அவர் என்றைக்காவது எல்லைக்கோ, பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கோ சென்றுள்ளாரா? மீனவர் பிரச்சினைகளுக்காக வந்துள்ளாரா? பகல்காமில் 20 பேரை கொன்றவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தாரா? அவர் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இருப்பார். எதிர்க்கட்சிகளின் ஆட்சியை எப்படி கலைப்பது என்று யோசிப்பார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் எப்படி தலையிடுவது என்றுதான் அமித்ஷா யோசிப்பார். தேர்தல் தேதிகளை அறிவிப்பதில் தீவிரமாக இருப்பார்.


