Homeசெய்திகள்அரசியல்"4 மாதத்திற்கு முன்பு எடப்பாடியார் தலைவர், இப்போது விஜய்யா?" - தவெக வேட்பாளர் சத்தியபாமாவைச் சாடிய...

“4 மாதத்திற்கு முன்பு எடப்பாடியார் தலைவர், இப்போது விஜய்யா?” – தவெக வேட்பாளர் சத்தியபாமாவைச் சாடிய ஆர்.பி. உதயகுமார்!

-

- Advertisement -

பதவி ஆசை, அதிகாரம் மற்றும் பணப்பெட்டி துரோகத்தால் தான் தாராபுரம் தொகுதிக்குத் தேவையில்லாமல் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என்றும், இங்கு விஜய்யின் சினிமா கவர்ச்சியும் வசீகரமும் எடுபடாது என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

we-r-hiring

மக்கள் எதிர்ப்பால் திணறும் தவெக வேட்பாளர்: செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அலை நிலவுகிறது என்றார். தொண்டர்களோடும் உள்ளூர் மக்களின் வரவேற்போடும் பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டியவர், இன்று காவல்துறையின் பெரும் படையோடு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் எனவும், வாக்காளப் பெருமக்கள் அவரை ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது எனவும் தெரிவித்தார்.

மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவே அவருடைய வாக்கு சேகரிப்புப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன என்றும், வாக்களிக்கச் சென்ற மக்களுக்குத் துரோகம் இழைத்த சத்தியபாமாவுக்கு இங்கு வாக்கு கேட்கும் தகுதியோ உரிமையோ கிடையாது என்றும் சாடினார்.

சினிமா வசீகரமும் வாழ்வாதாரமும்: எம்.எல்.ஏ-வாகப் பதவி ஏற்ற 10 நாட்களிலேயே ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிட்டார்கள். இன்று தாராபுரத்தில் குடிநீர்ப் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது; மின்வெட்டால் விவசாயம் முடங்கியுள்ளது. இந்த 4 மாதத்தில் தொகுதியை ஏறிட்டுக் கூடப் பார்க்காதவர்கள், ‘விஜய்யின் சினிமா கவர்ச்சி போதும், மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள்’ என நினைக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், இரண்டு மணி நேரப் பொழுதுபோக்குக்கு சினிமா வசீகரம் சரியாக இருக்கலாம், ஆனால் வாழ்நாள் முழுவதும் பயணிப்பதற்கும் வாழ்வாதாரத்திற்கும் அது ஒருபோதும் துணை நிற்காது என்பதைத் தாராபுரம் மக்கள் உணர்ந்துவிட்டார்கள் என்றார்.

தவெக தொண்டர்களின் மனக்குமுறல்: ஒரு கட்சியில் வெற்றி பெற்று, 4 மாதத்திலேயே வேறொரு கட்சிக்கு மாறி அதே தொகுதியில் வேட்பாளராக நிற்பது ஜனநாயகப் படுகொலை. ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா, எடப்பாடியார் தான் என் தலைவர்’ என்று கூறி ஓட்டு கேட்ட சத்தியபாமா, இப்போது விஜய்க்கு ஓட்டு கேட்கிறார் எனக் சாடியவர், தவெக-வில் ஆரம்பத்தில் இருந்து உழைத்த உண்மையான தொண்டர்களையும் ரசிகர்களையும் புறக்கணித்துவிட்டு, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் மனக்குமுறலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இரட்டை இலைக்கே வெற்றி உறுதி: எடப்பாடியார் பிரச்சாரத்திற்கு வந்தபோது மக்கள் அளித்த எழுச்சிகரமான வரவேற்பே சாட்சி. சாமானிய மக்கள் தர்மத்தின் பக்கமும் இரட்டை இலையின் பக்கமும் உறுதியாக நிற்கிறார்கள். தேர்தல் தீர்ப்பு வெளியாகும் போது, தாராபுரம் தொகுதி மக்கள் ஜனநாயகத்தைக் காத்து இரட்டை இலையை பிரம்மாண்டமாக வெற்றி பெறச் செய்வார்கள் என்று ஆர்.பி. உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

MUST READ