ஸ்பெயினின் முன்னணி கால்பந்து தொடரான லா லிகா வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற பயிற்சியாளர் என்ற சாதனையை அட்லெடிகோ மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் டியாகோ சிமியோனே படைத்துள்ளார்.

345 வெற்றிகளுடன் முன்னாள் பயிற்சியாளர் லூயிஸ் அரகோனஸ் வைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
லா லிகா தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி, கெட்டாஃப் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சிமியோனே தனது 345-வது லீக் வெற்றியைப் பதிவு செய்தார்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த சிமியோனே, இதுவரை 567 லா லிகா போட்டிகளில் பயிற்சியாளராகச் செயல்பட்டு 345 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு லூயிஸ் அரகோனஸ் 757 போட்டிகளில் 344 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தார். தற்போது அந்தச் சாதனையை சிமியோனே தன்வசப்படுத்தியுள்ளார்.
கெட்டாஃப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அலெக்ஸ் பாயேனா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து ஜானி கார்டோசோ இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அலெஜான்ட்ரோ கிரிமால்டோ கோலாக மாற்றினார். இதன்மூலம் அட்லெடிகோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2011-ஆம் ஆண்டு அட்லெடிகோ மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற சிமியோனே, அந்த அணியை ஸ்பெயின் கால்பந்தின் முன்னணி அணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளார்.
அவரது தலைமையில் இரண்டு லா லிகா பட்டங்கள், ஒரு கோபா டெல் ரே, ஒரு ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை, இரண்டு யூரோப்பா லீக் பட்டங்கள், இரண்டு யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பைகள் என மொத்தம் எட்டு முக்கியக் கோப்பைகளை அட்லெடிகோ வென்றுள்ளது.
இந்தச் சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சிமியோனே, இதற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தற்காப்பு ஆட்டத்தை மட்டுமே நம்பி 345 வெற்றிகளைப் பெற முடியாது என்றும் அவர் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் லா லிகா வரலாற்றில் தனி முத்திரை பதித்துள்ள சிமியோனேவுக்கு கால்பந்து ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கால்பந்து சம்மேளனத் தேர்தல் களம் சூடுபிடிப்பு: விமர்சனங்களுக்கு கல்யாண் சௌபே பதிலடி!
