Homeசெய்திகள்தமிழ்நாடுபேராசிரியர் கலையரசன் மீதான காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது! – எஸ்டிபிஐ கடும் கண்டனம்

பேராசிரியர் கலையரசன் மீதான காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது! – எஸ்டிபிஐ கடும் கண்டனம்

-

- Advertisement -

பொருளாதார ஆய்வறிஞரும் பேராசிரியருமான ஏ. கலையரசன் மீது காவல்துறையினர் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு எஸ்டிபிஐ (SDPI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, வரம்புமீறிச் செயல்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

we-r-hiring

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் அச. உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிகாலையில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சி

ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தவரும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவருமான சர்வதேசப் புகழ்பெற்ற பொருளாதார ஆய்வறிஞர் பேராசிரியர் ஏ. கலையரசனை, அதிகாலை நேரத்தில் சீருடை அணியாத காவலர்கள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் கருத்துப் பதிவிட்டதாகக் கூறி, உரிய ஆவணங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை (FIR) நகல் இல்லாமல், சாதாரண உடையில் வாடகைக் காரில் வந்த காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்று கலையரசன் தெரிவித்த பின்னரும், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற விதம் ஜனநாயகத்திற்கு எதிரானது என உமர் பாரூக் விமர்சித்துள்ளார்.

போலிக் கணக்கை முறையாக விசாரிக்க வேண்டும்

மாநில மற்றும் தேசிய அளவில் பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்தில் பங்களித்து வரும் மதிப்புமிக்க அறிஞரான கலையரசனிடம் அடிப்படை விசாரணைகளை முறையாக மேற்கொள்ளாமல், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பாக அவரது இல்லத்திற்கே சென்று நடவடிக்கை எடுத்திருப்பது சட்டத்தின் மாண்பைக் கேள்விக்குள்ளாக்குவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் சமூகச் சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரை மிரட்டும் நோக்கில் காவல்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.

குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

கலையரசனின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க வாய்ப்பளிக்காமல், அவரது கைப்பேசியைப் பறிமுதல் செய்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கும் உமர் பாரூக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும், சட்ட நடைமுறைகளை மீறி எவரும் நடத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் கண்டறியப்படும் காவல் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகத் துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உமர் பாரூக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கும் குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அறிஞர் கலையரசன் விவகாரம்: பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கடும் கண்டனம்!

MUST READ