Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் கீர்த்தனா ரூ.10 கோடிக்கு பங்களா வாங்கியதாகப் பரபரப்பு! “அந்த வீட்டுக்கும் அமைச்சருக்கும் எந்தத் தொடர்பும்...

அமைச்சர் கீர்த்தனா ரூ.10 கோடிக்கு பங்களா வாங்கியதாகப் பரபரப்பு! “அந்த வீட்டுக்கும் அமைச்சருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” – ஆவணங்களுடன் விளக்கம் அளித்த பராமரிப்பாளர்

-

- Advertisement -

சிவகாசி அருகே ரூ.10 கோடி மதிப்பிலான பிரமாண்ட பங்களாவைத் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வாங்கியதாகச் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்தப் பங்களா சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் அருள்முருகனுக்குச் சொந்தமானது எனக் கூறி, அதற்கான ஆவணங்களை வீட்டின் பராமரிப்பாளர் பால்ராஜ் வெளியிட்டுள்ளார்.அமைச்சர் கீர்த்தனா ரூ.10 கோடிக்கு பங்களா வாங்கியதாகப் பரபரப்பு! “அந்த வீட்டுக்கும் அமைச்சருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” – ஆவணங்களுடன் விளக்கம் அளித்த பராமரிப்பாளர்

பங்களாவுக்கும் அமைச்சர் கீர்த்தனாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

we-r-hiring

ரூ.10 கோடி பங்களா வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம்

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சிவகாசி அருகே உள்ள கட்டளைப்பட்டி கிராமத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான பிரமாண்ட பங்களா ஒன்றை வாங்கியுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. பிரபல பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவரின் உதவியுடன் இந்தப் பங்களா வாங்கப்பட்டதாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் உள்ளிட்டோர் இந்த விவகாரம் தொடர்பாகக் காணொளிகளை வெளியிட்டு விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட பங்களா யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்தது.

மேலும், அந்தப் பங்களாவின் சுற்றுச்சுவர்களில் தமிழக முதலமைச்சர் விஜய், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கீர்த்தனா, பெருந்தலைவர் காமராஜர், ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் உருவப்படங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களும் பங்களா தொடர்பான விவாதத்தில் கவனம் பெற்றன.

தொழிலதிபர் அருள்முருகனுக்குச் சொந்தமான பங்களா?

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பங்களா சிவகாசி ரத்தினம் நகரைச் சேர்ந்த இருசக்கர வாகன விற்பனை நிலைய உரிமையாளர் அருள்முருகனுக்குச் சொந்தமானது என்று வீட்டின் பராமரிப்பாளர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சுமார் 35 சென்ட் நிலப்பரப்பில் அருள்முருகன் பங்களா வீட்டைக் கட்டியதாகவும், அதற்கான பத்திரம் மற்றும் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய பட்டா நகலிலும் அந்தச் சொத்து அருள்முருகனின் பெயரில் இருப்பதாகக் கூறி ஆவண ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆவணங்களின் அடிப்படையில், பங்களா அமைச்சர் கீர்த்தனாவுக்குச் சொந்தமானது என்ற தகவலை மறுத்துள்ள பால்ராஜ், அந்த வீட்டுக்கும் அமைச்சருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மகள்களின் மருத்துவப் படிப்புக்காகச் சென்னையில் குடியேறிய உரிமையாளர்

தொழிலதிபர் அருள்முருகன் தனது இரு மகள்களின் மருத்துவக் கல்லூரிப் படிப்புக்காக 2022-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிவகாசியில் உள்ள பங்களாவைத் தனது இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றும் பால்ராஜ் பராமரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்முருகன் முக்கிய விழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சிவகாசிக்கு வந்து பங்களாவில் தங்கிச் செல்வதாகவும் பால்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சுற்றுச்சுவரில் அரசியல் தலைவர்களின் ஓவியங்கள் ஏன்?

பங்களாவின் சுற்றுச்சுவர்களில் முதலமைச்சர் விஜய் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் உருவப்படங்கள் வரையப்பட்டிருப்பது குறித்தும் பால்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

அருள்முருகன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு செய்திருந்ததாகவும், கட்சியின் மீதான பற்றின் காரணமாகச் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்களைப் பங்களாவின் சுற்றுச்சுவரில் ஓவியங்களாக வரையச் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியில் இணைவதற்கு முன்பே அருள்முருகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.

“தவறான தகவல்களைப் பரப்புவது வருத்தமளிக்கிறது”

பங்களா தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்று தெரிவித்த பால்ராஜ், அந்த வீட்டுக்கும் அமைச்சர் கீர்த்தனாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தன்னிடம் உள்ள ஆவணங்களைத் தேவையான இடங்களில் சமர்ப்பித்து உண்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை – தவெக நிர்வாகிகள் எச்சரிக்கை

இதற்கிடையே, அமைச்சர் கீர்த்தனா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் அவதூறான கருத்துகளும் பரப்பப்படுவதாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் மீது தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் தவெக நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

வெளவால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்!

MUST READ