நூறு நாட்கள் ஆன பின்னர் தான் தமிழகம் திரும்புவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் சி. பி. இராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். ஆனால் சிபி ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து இன்னும் தமிழகத்திற்கு திரும்பவில்லை.
ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவரின் ஆதரவாளர்களும் பாஜக தலைவர்களும் கோவையில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு நான் ஊருக்கு வரப்போவதில்லை. ஆளுநராக பதவி ஏற்ற 100 நாட்கள் ஆன பின்னர் தான் தமிழகம் திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்து இருப்பதாக கூறியிருக்கிறாராம்.
ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் சுற்றிப் பார்த்து அங்கு இருக்கும் மக்கள் நிலையை தெரிந்து கொள்வதுதான் இப்போது முதல் வேலை என்கிறார். சில மாவட்டங்களை சுற்றி பார்த்து ஆய்வு செய்து வரும் சிபி ராதாகிருஷ்ணன் மொத்த மாவட்டத்தையும் சுற்றி பார்த்த பின்னர் தான் தமிழகம் திரும்புவதாக இருக்கிறாராம்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் ஆளுநர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒரு விதிமுறை இருக்கிறது. ஆனால் பெரும்பாலான ஆளுநர்கள் இதை கண்டு கொண்டதே இல்லை. சிபி ராதாகிருஷ்ணன் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்கிறார்.