நெல்லையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 40 சவரன் நகை மற்றும் 27 லட்ம்ச ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளையடிப்பு சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே கும்பலாக வீட்டுக்குள் புகுந்து கட்டிப்போட்டு கொள்ளையடிப்பதும், சில இடங்களில் வீட்டில் கொள்ளையடிக்கும் போது பாலியல் தொந்தரவுகளும் அதிகம் இருப்பதாக நெல்லை மாநகர காவல் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பாளையங்கோட்டை கனரா பேங்க் காலனியில், பொதுப்பணித்துறை பெண் அதிகாரியின் வீட்டில் பூட்டை உடைத்து சுமார் 100 பவுன் நகை மற்றும் பல லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டன. ஜனவரி மாதம் 26 ஆம் தேதி மாநகரப் பகுதியில் உள்ள வி.எம்.சத்திரம் குடியிருப்பில் அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவரின் வீட்டிற்குள், 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கி கட்டிப்போட்டு சுமார் 50 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது.
இப்படி நெல்லை மாநகரின் பல்வேறு இடங்களில் வழிப்பறிகளும், கொள்ளைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதனை அடுத்து மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சீனிவாசன் மற்றும் சரவணகுமார் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் மாநகரப் பகுதியில் உள்ள பெருமாள்புரம், மேலப்பாளையம், பேட்டை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காவல் நிலையங்களில் உள்ள குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தொடர் தேடுதல் வேட்டையின் அடிப்படையில், நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை தொகுதி செயலாளார் ஜெயக்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வீடுகளில் கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும் திருடப்படும் நகைகளை விற்க திருப்பணி கரிசல் குளத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் உதவியது தெரியவந்தது. பிரகாஷ் நெல்லை டவுன் பகுதியில் நகை அடகுக்கடை நடத்திவந்துள்ளார். தொடர் விசாரணையில் இருவரும் திட்டமிட்டு கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்ததும், அந்த நகைகளை விற்று சொகுசு வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 250 சவரன் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. முதல்கட்டமாக 49 சவரன் நகைகளும், 27 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரும் நெல்லை ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு வருகிற 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் இருவர் மீதும் 12 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.