மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலி
சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அன்னையன் வீதியை சேர்ந்தவர் சண்முகராஜ் – பிரேமா ஆகியோரது மகன் பிரவீன் (13). கொடிவேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். சண்முகராஜ் வடக்கு பேட்டை சந்தன டிப்போ வீதியில் உள்ள தனியார் பள்ளி எதிரே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சண்முகராஜ் உடல்நிலை சரியில்லாததால், அவரது மகன் பிரவீன் இன்று காலை மளிகை கடையை திறந்து வைப்பதற்காக, இன்று அதிகாலை கடையை திறந்து டியூப் லைட்டை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பிரவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.