இந்திய இராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று பேரணியாக சென்றனர்.


பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய பேரணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காவல்துறையினர், மருத்துவர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

டிஜிபி அலுவலகத்தில் தொடங்கிய பேரணியானது கடற்கரை காமராஜர் சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் வரை நடைபெறுகிறது. பேரணியில் பங்கேற்றவர்கள் தேசிய கொடியை ஏந்தி, இந்திய ராணுவத்திற்கு துணை நிற்போம் என்கிற வாசம் அடங்கிய தொப்பி மற்றும் இந்திய ராணுவம் வெல்லும் என்கிற வாசகம் பொருத்திய தொப்பி மற்றும் பேட்ஜ் அணிந்துகொண்டனர். இந்த பேரணியானது விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, நேப்பியர் பாலம் வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கி சென்றனர்.

இதனையொட்டி காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பேரணியில் பங்கேற்போர் வசதிக்காக குடிநீர், கழிப்பறை, மருத்துவம், நிழற்குடை என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


