மின்தடையால் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி, இன்று காலை திடீரென ஏற்பட்ட மின்தடையால் உயிரிழந்தார்.
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி காளிமுத்து அம்மாள் என்பவர் இதய நோய்க்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் அங்குள்ள ஐசியூ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரண்டு தினங்களாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. 20 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி காளிமுத்து அம்மாள் திடீரென உயிரிழந்தார். அப்போது மின்தடை ஏற்பட்ட நேரத்தில் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெனரேட்டர் இயங்காததால் மின்தடை ஏற்பட்ட காரணத்தால் மூதாட்டி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.