2021ல் குறைவான வாக்குகள் பெற்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் – மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் வியூகங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களை முன்வைத்து பல்வேறு அறிவுறுத்தல்களை முதலமைச்சர் வழங்கியதாக கூறப்படுகிறது.
கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே .எஸ்.இளங்கோவன், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் குறைவான வாக்குகள் கிடைத்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், எஸ்.ஐ.ஆர் பணிகளில் விடுபட்டவர்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளுடன் ஒத்துழைத்து பணியாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறினார். மாவட்டங்களின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் கருத்துகளை கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறி வருவதாகவும், ஆனால் பாஜக தரப்பில் அது மறுக்கப்பட்டதா என்ற கேள்வியையும் டி.கே.எஸ்.இளங்கோவன் எழுப்பினார்.
உடல்நிலை காரணமாக ஓய்வில் இருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, அவரது உடல்நலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது “வந்துட்டேன்யா வந்துட்டேன்” என்று பதிலளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல்நலக் காரணமாக ஓய்வில் இருந்ததாகவும், தற்போது மீண்டும் கட்சிப் பணியை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறினார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெற்றது.
தேர்தல் களம் தயார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!
