தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் நன்றி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்களித்த மக்களுக்கு நன்றி
கடந்த 6-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், இடதுசாரி கட்சிகளின் சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம் தொகுதியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுராந்தகம் தொகுதியிலும் போட்டியிட்டன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கும் வாக்களித்த மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பணபலம், சாதி, மத உணர்வுகளைத் தேர்தல் அரசியலுக்காக முதலாளித்துவ அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. சமூக மாற்றத்திற்கான நீண்ட நெடிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தேர்தல் களத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
வெற்றி, தோல்வி என்பதை ஒவ்வொரு காலகட்டத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தீர்மானிக்கின்றன. மக்கள் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளின் அடிப்படையில் பெரும்பாலும் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கின்றனர். இருப்பினும், அரசியல் ஆதாயத்திற்காகச் சாதி, மதம், இனம் போன்ற உணர்வுகளை முன்னிறுத்தி மக்களைத் திசைதிருப்பும் செயல்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இடதுசாரிகள் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். இந்த இடைத்தேர்தலிலும் அவ்வாறே செயல்பட்டனர். மக்கள் அளித்த தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்கிறது.
மக்களின் உண்மையான விருப்பங்கள் பிரதிபலிப்பதில்லை
உழைக்கும் மக்களுக்காக அயராது போராடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளை ஆதரிக்க வேண்டும் என்ற மனநிலை மாற்றம் ஏற்பட வேண்டும்.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை இல்லாததாகும். இது சிறிய கட்சிகளுக்கும், பணபலம் இல்லாத உழைக்கும் மக்களின் கட்சிகளுக்கும் எதிராக உள்ளது. மக்களின் உண்மையான விருப்பங்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பதில்லை.
அரசியல் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இந்தக் குறைபாடு போக்கப்பட வேண்டும்.
இன்றைய தேர்தல் முறையில் பணபலம் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது. வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுத்து வாக்குகளைப் பெறுவது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது. எனவே, தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை உடனடியாகக் கொண்டுவர வேண்டும்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் குறித்த இந்திரஜித் குப்தா குழு மற்றும் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தை எதிர்த்தும், தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் அனைத்து இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய்? சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கத் திட்டம்!
