தென் இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழ்நாடு மூலம் ஒரு வாய்ப்பு அமைய உள்ளது. ஸ்டாலின் அதை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் பேட்டியளித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிலைப்பாடு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திவிட்டு இன்று டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.
அப்போது அக்கட்சியின் தொண்டர்கள் வசீகரனுக்கு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர் கூறியதாவது, “அரசியலில் தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது, கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிட்டு சுமார் 25 தொகுதிகளிலும் 20 ஆயிரம் வாக்குகள் வாங்கியது. அதன் பிறகு நீண்ட காலமாக தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடவில்லை, தற்பொழுது இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியினர் போட்டியிட்டு வருகின்றனர்.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கூட நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியில் சேர வேண்டிய கட்டாயத்தில் சேர்ந்தார். இதனால் இந்தியா கூட்டணியை சேர்ந்த ராகுல் காந்தி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றார்.
இன்று தமிழ்நாட்டில் பாஜகவை வீழ்த்த வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி திமுக உடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆதரித்து தொடர்ந்து நாங்கள் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளோம்.
திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்காக எங்களை அழைத்து பேச்சு வார்த்தைகளை நடத்தினார். ஈகோ இல்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத்மான் ஆகியோரை தமிழ்நாட்டிற்கு அழைத்து கல்வி சம்பந்தமான பல திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். எங்களுக்குள் நல்ல நட்புறவு தொடர்ந்து இருக்கிறது.
பாஜக அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி சேரும் கட்சிகளை விழுங்கி கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதை செய்து கொண்டிருக்கின்றனர். பாஜகவினர் வாக்கு இயந்திரங்களில் வாக்குகளை திருடுகிறார்கள் எஸ்.ஐ.ஆர் மூலம் திருடுகிறார்கள். அதை மீறியும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு அவர்களின் பெயர்களை கெடுக்கின்றனர்.
ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு விரோதமான கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கொள்ளை புறமாக புகுந்து வந்து கொண்டிருக்கின்றனர். அரசியல் சுலபமானது கிடையாது அது எவ்வளவு கஷ்டம் என்பது தவெக தலைவர் விஜய்க்கு தெரிய வேண்டும்.
தொடர்ந்து திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆம் ஆத்மி கட்சி நிச்சயமாக தேர்தலில் போட்டியிடும். தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அங்கீகாரம் கொடுப்பார்.
தமிழ்நாட்டில் ஆம் ஆத்மிக்கு சீட்டு ஒதுக்கப்பட்டால் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத்மான் அனைவரும் பிரச்சாரம் செய்வதற்கு வருவார்கள். எங்களுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டால் நாங்கள் தேசிய கட்சி எங்களுடைய சின்னத்தில் தான் நாங்கள் நிற்ப்போம்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் விவசாய பிரச்சனை மக்கள் பிரச்சனைகளுக்கு போராடி வருகிறோம். சில பெரிய முகங்கள் போராட்டம் நடத்தினால் சுலபமாக அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. வரும் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமான தேர்தல்.
தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு வாய்ப்பு தருவார் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். தென் இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழ்நாடு மூலம் ஒரு வாய்ப்பு அமைய உள்ளது. ஸ்டாலின் அதை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் கூறினார்.
விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை
