தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நடவடிக்கை, ஆளுங்கட்சியின் அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கையும் ஜனநாயக விரோத நடவடிக்கையையும் காட்டுவதாகத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி.) பி.வில்சன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இக்கைது நடவடிக்கை குறித்துத் தெரிவித்ததாவது,
ஜனநாயகக் குரல்களை முடக்கும் முயற்சி
“தஞ்சாவூரில் விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி உரிமைக்காகத் திமுக சார்பாக மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் தோல்விகளையும் மெத்தனப்போக்கையும் சுட்டிக்காட்டினார். ஆனால், அவர் மீது முற்றிலும் சோடிக்கப்பட்ட, பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் வகையில் தமிழக அரசு அக்கிரமமாகச் செயல்பட்டு வருகிறது.”

காவிரிப் பிரச்சினையைத் திசைதிருப்பவே சதி
“நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம். விவசாயிகள் சந்திக்கும் முக்கியச் சிக்கல்கள் மற்றும் காவிரி விவகாரத்தில் அரசின் தோல்விகளை மூடி மறைக்கவும், மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவுமே இத்தகைய ஜோடிக்கப்பட்ட வழக்குகளை ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிடவில்லை. உண்மையை மறைத்து, வீடியோக்களை எடிட் செய்து தவறான பரப்புரையை மேற்கொண்டு இந்த அவசரக் கைதை அரங்கேற்றியுள்ளனர். இதனைச் சட்டரீதியாக எதிர்கொண்டு நீதியைப் பெறுவோம்.” என திமுக எம்.பி. பி.வில்சனின் தெரிவித்துள்ளாா்.
