பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தாமல் தமிழக அரசு மௌனம் காப்பது தனியார் பால் நிறுவனங்களை மறைமுகமாக ஊக்குவிக்கும் செயலாகும் எனத் தமிழ்நாடு ஆவின் பணியாளர் நல சங்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. விலை உயர்வு வழங்காவிட்டால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கதியே ஆவினுக்கும் ஏற்படும் என எச்சரித்துள்ள சங்கத்தினர், விரைவில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டம்:
சேலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஆவின் பணியாளர் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பால் கூட்டுறவு ஊழியர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஏராளமான கூட்டுறவு சங்க மற்றும் ஆவின் பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு பாலின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்துவது குறித்து தீவிரமாக விவாதித்தனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர்கள் தெரிவித்த முக்கியக் கருத்துகள்,

தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அரசு
“தீவனங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்ட நிலையில், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கக் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 முதல் 15 ரூபாய் வரை உயர்த்தித் தர வேண்டும். ஆனால், ஓட்டு அரசியலுக்காக விற்பனை விலையை உயர்த்தாமல் அரசே தயங்குவதால், கூட்டுறவு சங்கங்களும் ஆவினும் நலிவடைந்து வருகின்றன. இதைப் பார்க்கும் போது, அரசு தனியார் பால் நிறுவனங்களை மறைமுகமாக ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.”

பி.எஸ்.என்.எல். நிலைக்குத் தள்ளப்படும் ஆவின்
“கூட்டுறவுச் சங்கங்கள் இல்லையென்றால் விவசாயிகளுக்குப் பாலுக்கான உரிய விலை கிடைக்காது; தனியார் நிறுவனங்களே கோலோச்சும். இதே நிலை நீடித்தால், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். போல ஆவினும் நலிவடைந்து மூடும் அபாயம் உருவாகும். அப்போது தனியார் நிறுவனங்கள் தங்கள் இஷ்டப்படி விலையை ஏற்றி மக்களைச்ரமப்படுத்துவார்கள்.”
30 சதவீதம் சரிந்த ஆவின் பால் வரத்து
“தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை தருவதால், பால் உற்பத்தியாளர்கள் அங்கே சென்றுவிட்டனர். இதனால் ஆவினுக்கு வரவேண்டிய பால் வரத்து தற்போது 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. அரசு ஊக்கத்தொகையை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும். பட்ஜெட்டில் விலை உயர்வு வரும் என்று நம்பி ஏமாந்தோம்; இனியும் செவிசாய்க்காவிட்டால் மிகப்பெரிய பால் நிறுத்தப் போராட்டம் வெடிக்கும்.”
நிர்வாகத்திற்குத் இறுதி எச்சரிக்கை
“மானியக் கோரிக்கை விவாதம் முடிவதற்குள் தமிழக அரசு பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், அடுத்தகட்டமாகத் தமிழகம் முழுவதிலும் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்” எனத் தலைவர் பழனிச்சாமியும், பொதுச் செயலாளர் ராஜேந்திரனும் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
அரசு உடனடியாகத் தலையிட்டுப் பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கும் என்ற அறிவிப்பு தமிழக அரசியல் மற்றும் விவசாய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம்: விரைவில் நல்ல செய்தி வெளியாகும் – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!
