அயோத்தி சாமியாரின் பேச்சு வன்முறை அல்ல – செல்லூர் ராஜூ
அயோத்தி சாமியாரின் பேச்சை வன்முறையாக கருதவில்லை எனவும், சாமியார் மனம் வெதும்பி பேசியுள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிய அளித்த செல்லூர் ராஜூ, “சனாதனம் குறித்த கருத்துக்குள் நான் சொல்லவிரும்பவில்லை. அதிமுக அனைத்து மதத்தினரையும் சமமாக கருதக்கூடிய இயக்கம். அனைத்து மதத்தினரும் மதிக்கக் கூடிய கட்சி அதிமுக. இக்கட்சியில் சாதிமத வேறுபாடுகள் கிடையாது. சாதுக்களே இந்த அளவிற்கு மனம் வெதும்பி போய் பேசி இருக்கிறார்கள். அதை வன்முறையாக நான் கருதவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து” எனக் கூறினார்.
முன்னதாக சனாதனம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்திருந்தார்.