திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடியிருப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் மற்றும் பெண்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
10 ஆண்டுகளாகத் தொடரும் அவதி:
ஆரணி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை (கடை எண்: 9316) செயல்பட்டு வருகிறது. இக்கடையால் அப்பகுதி மக்கள், குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். மது குடிக்க வரும் நபர்கள் போதையில் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபடுவதாகவும், இதனால் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் கூறி, கடையை மாற்றக் கோரி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனுக்களை அளித்துள்ளனர்.
ஏமாற்றமடைந்த கிராம மக்கள்:
இந்நிலையில், தமிழக அரசு அண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, தங்கள் பகுதியில் உள்ள கடையும் இந்த மூடப்படும் பட்டியலில் இடம் பெறும் என வண்ணாங்குளம் கிராம மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். ஆனால், அரசு வெளியிட்ட மூடப்படும் கடைகளின் இறுதிப் பட்டியலில் இந்தக் கடை இடம் பெறாததால் கிராம மக்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.


பெண்கள் முற்றுகைப் போராட்டம் – போலீசார் சமரசம்:
அரசின் முடிவால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள், இன்று காலை வழக்கம்போல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டபோது, கடையை அதிரடியாக முற்றுகையிட்டுப் போராட்டத்தைத் தொடங்கினர். கடையை உடனடியாக அகற்றக் கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளரிடமும் (Supervisor) போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். போலீசாரின் சமரசத்தை ஏற்றுப் பொதுமக்கள் கலைந்து சென்றதைத் தொடர்ந்து, கடை மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
