அரவக்குறிச்சியில் காரில் சென்று ஆடுகளை திருடிய பாஜக நிர்வாகி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 27ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் அடையாளம் தெரியாத 3 நபர்கள் அரசியல் கட்சிக் கொடியுடன் சொகுசு காரில் வந்து 10க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியுள்ளனர். இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளரான ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பர்களான கன்னிவாடியை சேர்ந்த சதீஷ்குமார், சிவக்குமார் ஆகியோர் ஆடுகளை திருடியது தெரியவந்தது. மேலும் பாஜகவில் நிர்வாகியாக உள்ள ரஞ்சித் குமாருக்கு சொந்தமான காரில் சென்று 3 பேரும் ஆடுகளை திருடியதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேரையும் போலிசார் கைது செய்து, அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.