பல் பிடுங்கிய விவகாரம்- சிபிசிஐடிக்கு மாற்றம்
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது காவல்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாகவும், கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்களைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர்சிங் மீது IPC 323, 324, 326 மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் கொடுக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.