தமிழக அரசின் வரவு செலவு பட்டியல்
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாயில் வரவு என்ன செலவு என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் மொத்த வருமானம் ஒரு ரூபாய் என்றால் அதில் 44 காசுகள் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலம் திரட்டப்படுகிறது.
பொதுக் கடன் மூலம் 33 காசுகள் வருவாயாக கிடைக்கிறது. மத்திய வரிகளின் பங்கு மூலமாக 10 காசுகளும் ஒன்றிய அரசிடமிருந்து பெரும் உதவி மானியங்கள் மூலமாக 7 காசுகளும் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கிறது.
மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் மூலமாக 5 காசுகளும் கடன்களின் வசூல் மூலமாக 1 பைசாவும் திரட்டப்படுகிறது.
அதேசமயம் தமிழ்நாடு அரசின் மொத்த செலவு 1 ரூபாய் என்றால் உதவித்தொகை மற்றும் மானியங்களுக்கு 30 காசுகள் செலவிடப்படுகிறது.
ஊதியங்களுக்காக 19 காசுகளும் வட்டி செலுத்துவதற்காக 13 காசுகளும் செலவிடப்படுகின்றன.மூலதன செலவுகளுக்காக 11 காசுகளும் கடன்களை திருப்பி செலுத்துவதற்காக 11 காசுகளும் தமிழ்நாடு அரசு செலவழிக்கிறது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வு காலப் பலன்களுக்காக 9 காசுகள் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகளுக்கு என 4 காசுகளும் கடன் வழங்குவதற்காக 3 காசுகளும் செலவிடபடுகின்றன.