spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது - மாமனிதர் ஆர்என்கே மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது – மாமனிதர் ஆர்என்கே மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

-

- Advertisement -

உழைக்கும் மக்களின் பாதுகாப்புப் பேரரணாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.

மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது - மாமனிதர் ஆர்என்கே மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

we-r-hiring

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ”எளிமை செம்மல் ‘ஆர்என்கே’ அவர்களின் மறைவால் உருவாகியுள்ள வெற்றிடத்தைக் காலத்தாலும் இட்டுநிரப்ப இயலாது!

இந்திய ஒன்றிய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தகைசால் தமிழர் அய்யா ஆர்.என்.கே  அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவர் நூறாண்டுகள் வாழ்ந்து நிறைவாழ்வை அடைந்தவர் என்றாலும், அவரது  மறைவு நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.

மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது!

மகத்தான எளிமையின் சிகரம் சாய்ந்தது! அரசியல் தூய்மையின் பேரொளி மறைந்தது! பாட்டாளிகளின் உற்றத் தோழரின் மறைவு எவராலும் ஈடுசெய்ய முடியாதது! உழைக்கும் மக்களின் பாதுகாப்புப் பேரரணாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்!

அவருடைய வயதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வயதும் ஒன்றே என்பது அவருக்கு வாய்த்த – தன்னியல்பாக அமைந்த ஒரு மகத்தீன பெருமையாகும். அவர் இந்திய விடுதலை போராட்டத்தில் பள்ளிப் பருவத்திலேயே பங்கேற்று சிறைபட்டு ஈகம் புரிந்தவர். ஆங்கிலேய வல்லாதிக்க ஆட்சியாளர்கள் அவருக்குச் சொல்லொணா கொடுமைகளை இழைத்தனர். மிடுக்கான தோற்றம் கொண்ட அவரது மீசையைத் தீயால் சுட்டுப் பொசுக்கிய கொடூரத்தையும் அரங்கேற்றினர். அதிலிருந்து அவர் மீசை வைப்பதைக் கைவிட்டார் என்பது நம் கண்ணீரை உகுக்க செய்யும் குரூரமான வரலாறாகும்.

இந்தியப் பொதுவுடைமை கட்சியில் இணைந்து களமாடிய அவர்மீது “நெல்லை சதி வழக்குப்” புனையப்பட்டது. அதனையொட்டி சிறைப்படுத்தப்பட்ட அவர் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். சாதி,மதம் கடந்து உழைக்கும் மக்களை அமைப்பாக்கி அவர்களை அரசியல்படுத்தி வர்க்க விடுதலைக்கான புரட்சியை முன்னெடுக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டியவர்.

எளிமையான பொதுவாழ்வு; வலிமையான போர்க்குணம்; உறுதியான கொள்கை பிடிப்பு; பக்குவமான அணுகுமுறை போன்றவையே அவரது அடையாளங்கள் ஆகும்.

விடுதலைச் சிறுத்தைகளின் மீது பேரன்பைப் பொழிந்தவர். எப்போதும் என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தியவர். சிறுத்தைகளின் “அம்பேத்கர் சுடர்” விருதினைப் பெற்றுக் கொண்டு எமக்குப் பெருமை சேர்த்தவர்.

“தகைசால் தமிழர்” என தமிழ்நாடு அரசால்- மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பாராட்டப்பெற்ற பெருந்தகை ஆவார்.

பொதுவாழ்வில், குறிப்பாக தேர்தல் அரசியல் களத்தில் இத்தகைய ‘தூய்மைமிகு பேராளுமை’ இனி எப்போது வாய்க்கும் என்னும் ஏக்கமே மிஞ்சுகிறது. எளிமை செம்மல் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் மறைவால் அரசியல் களத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தைக் காலத்தாலும் இட்டு நிரப்ப இயலாது.

அவரது திருவுடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது. இச்சூழலில் தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய ஒன்றிய அரசு அவரது ஈகம் நிறைந்த பொதுவாழ்வையும்; தேசத்தின் விடுதலைக்கான அறப்போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் போற்றும் வகையில் அவருக்கு தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

முதுபெரும் தலைவர் தோழர் ஆர்என்கே அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட உற்றார் உறவினர்களுக்கும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளா்.

தலைவர் நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

MUST READ