சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சராக பொறுப்பு உயர்வும், கூடுதல் இலாகாக்களும் ஒதுக்கப்பட்டன. மேலும், புதிதாக 4 அமைச்சர்கள் பொறுப்பேற்ற நிலையில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிய அமைச்சர்கள் மற்றும் இலக்கா மாற்றப்பட்ட அமைச்சர்களுக்கு துறை ரீதியாக அறிவுரைகள், மாநில பொருளாதரத்தை மேம்படுத்துவதற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது.
மேலும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் விரிவாக்க பணிக்கு ஒப்புதல், மாநில அரசின் நிதி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்துதல், பயன்பாட்டில் உள்ள திட்டங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.