இந்தியாவில் மின்சார விநியோக நிறுவனங்களின் நிதிநிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து முதல் முறையாக நாடு தழுவிய அளவில் விரிவான தணிக்கையை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அலுவலகம் தொடங்கியுள்ளது. இந்தத் தணிக்கையின் முடிவில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 39 மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் 5 மின்சாரத் துறைகளில் இந்தத் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு!
2025-ம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, இந்தியாவின் மின் விநியோக நிறுவனங்களின் ஒருங்கிணைந்த திரட்டப்பட்ட இழப்பு ரூ.3.41 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது.
அதேபோல், இந்நிறுவனங்களின் நிலுவைக் கடன் ரூ.7.26 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதற்கான வட்டிச் சுமை மட்டும் ரூ.77,653 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் எவ்வளவு?
நாடு முழுவதும் மின்சார நிறுவனங்களின் நிதிநிலை இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியக் குழுமத்தின் நிதிநிலையும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியக் குழுமத்தின் மொத்த நிலுவைக் கடன் ரூ.2,47,130 கோடியாக உள்ளது.
மேலும், அதன் ஒட்டுமொத்தத் திரட்டப்பட்ட இழப்பு (Accumulated Losses) ரூ.1,82,361 கோடியாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிஏஜி தணிக்கையில் வெளியாகப் போவது என்ன?
மின்சார நிறுவனங்களின் வருவாய், செலவினங்கள், கடன் மேலாண்மை, நிதி இழப்புகள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தத் தணிக்கையில் ஆய்வு செய்யப்பட உள்ளன.
ஏற்கெனவே பல லட்சம் கோடி ரூபாய் கடன் மற்றும் இழப்புகளைச் சந்தித்து வரும் மின்சாரத் துறையில், இந்தத் தணிக்கை மூலம் என்னென்ன முறைகேடுகள் அல்லது நிர்வாகக் குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வரப்போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் மற்றும் திரட்டப்பட்ட இழப்புகள் தொடர்பான விவரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சிஏஜி தணிக்கையின் இறுதி அறிக்கை வெளியான பிறகுதான், மின்சாரத் துறையின் நிதிநிலை குறித்த முழுமையான உண்மைகள் தெரியவரும். தணிக்கையின் முடிவில் இன்னும் எங்கெல்லாம் பூதம் கிளம்பப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் மின்சாரத் துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது.
