போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப
ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழீலாளர்களுக்கும் ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்க வேண்டி உள்ளது. இதில் 50 சதவீத வருங்கால வைப்புத் தொகை உட்பட பணப்பலனின் ஒரு பகுதியை வழங்க ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி போக்குவரத்து ஓய்வூதியதாரர்களின் பணப்பலன் வழங்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடியும், விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.5.8 கோடியும், சேலம் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.3.6 கோடியும், கோவை போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ. 4.3 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.8 கோடியும், மதுரை போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.3.2 கோடியும், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.2.9 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.