தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று மத்தியகிழக்கு அரபிக்கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மஹாராஷ்ட்ரா கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுபெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 13-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது.
நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் ஆகிய 8 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 14ஆம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களிலும், வரும் 15ஆம் தேதி திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 9 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.