தமிழகத்தின் ஜீவாதார நதிகளான கூவம் மற்றும் அடையாற்றை நச்சுக்கழிவு நீரோடையாக மாற்றிவிட்டு, டெல்லிக்குக் கடிதம் எழுதும் சம்பிரதாய நாடகங்களை நடத்தித் தப்பிக்கப் பார்க்கிறதா அரசு? என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையின் அடையாளமாக இருந்த நதிகளைக் குப்பைமேடாகவும் கழிவுநீர் கால்வாயாகவும் மாற்றிவிட்ட திராவிட மாடல் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கை அரசியல் விமர்சகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.


கடித நாடகமும் வெற்று வாக்குறுதிகளும்!
பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும், மீனவர் கைதுக்கு அறிக்கை விடுவதும் மட்டுமே ஒரு முதலமைச்சரின் முழுநேரப் பணியாக இருக்க முடியாது. கடந்த காலங்களில் இதே போலக் கடிதங்களை எழுதி ஏமாற்றியது போன்றுதான் இப்போதும் வெறும் காகிதப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றனவே தவிர, களத்தில் எந்தவொரு ஆக்கபூர்வமான மாற்றமும் நிகழவில்லை. நதிநீர் இணைப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து வெறும் கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதை விட்டுவிட்டு, எப்போது உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறீர்கள்?
திருவள்ளூரில் உற்பத்தியாகி சென்னை நகரம் முழுவதும் ஊடுருவிச் செல்லும் கூவம் நதியைச் சிங்கப்பூர் போல அழகாக மாற்ற முடியும் என்று பலமுறை எச்சரிக்கப்பட்டும், ஆட்சியாளர்கள் அதனை வெறும் கழிவுநீர் வடிகாலாகவே கருதி வருவது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
ஆற்றின் இரு கரைகளிலும் முறையான சுத்திகரிப்பு நிலையங்கள் (Treatment Plants) அமைக்கப்படாமல் இருப்பது ஏன்? வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் எந்தவிதத் தடையுமின்றி ஆற்றில் கலப்பதை வேடிக்கை பார்ப்பது ஏன்? நேப்பியர் பாலம் அருகே கடல் நீரில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளும், டன்னுக் கணக்கான மருத்துவக் கழிவுகளும்தான் இந்த அரசின் சாதனையா?

மீனவர்களின் கண்ணீரும் கடித அரசியலும்!
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தினந்தோறும் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகிவிட்ட போதும், பெயரளவுக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அமைதியாகிவிடுகிறது அரசு. மீனவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்படுவதைத் தடுத்து நிறுத்தத் திராணியில்லாதவர்கள் எப்படித் தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்?

இயற்கையைச் சிதைக்கும் கையாலாத்தத்தனம்!
ஆறுகளையும் இயற்கையையும் காப்பாற்றத் துணிவில்லாதவர்கள் கோட்டையில் அமர்ந்து என்ன சாதித்துவிடப் போகிறார்கள்? வெறும் மேடைப் பேச்சுகளாலும், கண்துடைப்புத் திட்டங்களாலும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் வளங்களையும் இனியும் அழிக்க அனுமதிக்க முடியாது. சென்னையின் நதிகளையும் தமிழர்களின் உரிமைகளையும் மீட்டெடுக்கத் துணிவில்லாத இந்த நிர்வாகத் திறமையற்றப் போக்கைத் தமிழக மக்கள் தங்களது வாக்குரிமையால் சுக்குநூறாக உடைத்தெறியும் காலம் வெகுதொலைவில் இல்லை!
