கோவையில் நகை பட்டறைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தங்க நகைகள் தயாரிப்பு குறித்து பொற்கொல்லர்களிடம் கேட்டறிந்தார்.
கோவைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகை தயாரிக்கும் பொற்கொல்லர்கள் அதிகம் வசிக்கும் தர்மராஜா கோயில் வீதி கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள நகை பட்டறைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொற்கொல்லரிடம் தங்க நகைகள் தயாரிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
முன்னதாக தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர், இன்று மதியம் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கெம்பட்டி காலனியில் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் முதலமைச்சர் பெற்றுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் கூட்டு குழும தலைவர் ரகுநாதன் சுப்பையா முதலச்சரிடம், பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும், தொழில் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடுமாறு கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமை செயலாளர் முருகானந்தம், ஆட்சியர் கிராந்தி குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.