தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து தஞ்சை மார்க்கமாக சென்னைக்கு பகல் நேர ரயில் இன்று முதல் இயக்கப்பட்டது.
தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு இன்று முதல் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்தது.
புதிய ரயில் திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு காலை 6.25 மணிக்கு வந்தடையும். பின்னர் கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12 .10 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு தஞ்சை வந்தடையும் என தென்னக ரயில்வே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், திருச்சியில் அதிகாலை 5.35க்கு புதிய ரயில் புறப்பட்டு, காலை 6.25 மணிக்கு தஞ்சை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, புதிய ரயிலுக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தலைமையில் ஏரளமானோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் தங்களது நீண்ட நாள் கோரிக்கக் நிறைவேறியதால் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்த ரயில்சேவை திங்கள், வியாழன் தவிர வாரத்தின் 5 நாட்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.