ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் வாக்குகள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, விருதுநகரில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் பெங்களூரு பெல் (BHEL) நிறுவனப் பொறியாளர்கள் முன்னிலையில் இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.


எனினும், மாதிரி வாக்குப்பதிவு செய்ய மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும், வி.வி.பாட். சீட்டுகளை எண்ணிச் சரிபார்க்க மறுத்துவிட்டதாகவும் தி.மு.க.வினர் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்கலாம் எனக் கூறி, குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடி மையங்களின் இயந்திரங்களைச் சரிபார்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் நிறுவனப் பொறியாளர்கள் இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இராஜபாளையம் தி.மு.க. நகர செயலாளர் இராமமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், கழகத் தலைமையின் அறிவுறுத்தலின்படி மறுசரிபார்ப்பு செய்யக் கோரி விண்ணப்பித்திருந்தோம். நாங்கள் குறிப்பிட்ட 14 இயந்திரங்களில் தற்போது 2 இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன; இன்னும் 12 இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட வேண்டி உள்ளன.
நாங்கள் எதிர்பார்த்ததுபோல வி.வி.பாட். சீட்டுகளை எண்ணி, பதிவான வாக்குகளைச் சரிபார்க்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ‘சட்டத்திலும் தேர்தல் ஆணைய வழிமுறைகளிலும் அதற்கு இடமில்லை; வேண்டுமானால் மாதிரி வாக்குகளைப் பதிவு செய்து இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ளலாம்’ என்று கூறிவிட்டனர்.
இதனால் எங்களுக்கு முழுத் திருப்தி இல்லை என்றாலும், வேறு வழியின்றித் தொடர்ந்து இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
