சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில் வருகின்ற 29ம் தேதி அவரையும் அவரது மனைவி ரம்யாவையும் நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இவர் அதிமுக அமைச்சரவையில் 8 ஆண்டு காலமாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நிலையில் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஊழல்கள் முறைகேடுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டு இவர் அமைச்சராக இருந்தபோது இவரது வீடு உள்ளிட்ட இவருக்கு சம்பந்தமான பல்வேறு இடங்களில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா குட்கா முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அமலாக்கத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் சோதனை செய்தனர்.
அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 2021 அக்டோபர் மாதம் 18ம் தேதி தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் 2016 முதல் 21 வரை வருமானத்தை விட அதிகமாக 27 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் அசையா சொத்துக்கள் என பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீடு உள்ளிட்ட 56 இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் 23.85லட்சம் ரூபாய் ரொக்கம் 4.87 கிலோ தங்கம் 136 கனரக வாகனங்களின் சான்றுகள் 19 ஹார்ட்டிஸ்க் என பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கொரோனாவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டார் என பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா மஞ்சக்ரனை கிராமத்தில் உள்ள வேல்ஸ் என்ற தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக முறைகேடாக தகுதி சான்றிதழை 2020ம் ஆண்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வழங்கி உள்ளதாக கிடைக்கப்பெற்ற ஆவணத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழ்நாடு முழுவதும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மட்டுமே நடத்தி உள்ளதாகவும், அதற்குப் பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் வந்த நிலையில் ஆதாரப்பூர்வமாக தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் பதியப்பட்ட வழக்கில் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்தை விட அதிகமாக 53 சதவீதம் குறிப்பாக 35 கோடியே 79 லட்சம் ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இவரது பெயரிலும் இவரது மனைவி ரம்யா பெயரிலும் வாங்கி குவித்தது தெரிய வந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் கடந்த மே மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜராகி நீதிபதி ஜெயந்தி முன்பு 216 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த குற்றப்பத்திரிக்கையில் சென்னை டி நகரில் 14 கோடி ரூபாய் மதிப்பில் வீடு அசையும் சொத்துக்களான 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொழிற்சாலைகள் என 800 சொத்துக்களை வருமானத்திற்கு அதிகமாக வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவித்து பத்தாயிரம் பக்க சொத்து ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அந்த நீதிமன்றம் மூலம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஐந்தாம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் வருகின்ற ஆகஸ்டு 29ம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரையும் அவரது மனைவி ரம்யாவையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கு அடுத்த கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக சான்றுகள் வழங்கிய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.