Homeசெய்திகள்தமிழ்நாடு74-வது குடியரசு தின விழாவில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பங்கேற்ப்பு

74-வது குடியரசு தின விழாவில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பங்கேற்ப்பு

-

- Advertisement -

74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர். என். ரவி தேசிய கொடி ஏற்றி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால், உழைப்பாளர் சிலை அருகே இவ்விழா நடைபெற்றது.

we-r-hiring

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக சில நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்பட்டு 22 நிமிடங்களில் விழா நிறைவடைந்தது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதோடு, பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு, இருசக்கர வாகன அணிவகுப்பு மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது துணைவியார் துர்க்கா ஸ்டாலின் வருகை தந்தனர். இதை தொடர்ந்து. 7.54 மணிக்கு ஆளுநர் ஆர். என். ரவி, அவரது மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தந்தார்.

அதைத்தொடர்ந்து அணி வணக்கம் ஏற்கும் மேடையருகில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை ஆளுநர் ரவிக்கு, சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத தொடர்ந்து, காலை 8 மணிக்கு தேசிய கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றினார். அப்போது இந்திய விமானப்படை மூலம் ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர், ராணுவப்படை, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டு குழல் முரசிசை பிரிவு, வான் படை பிரிவு, கடலோரக் காவல் படை பிரிவு, கடற்படை ஊர்தி, வான்படை ஊர்தி, கடலோரக் காவல் ஊர்தி, முன்னாள் இராணுவத்தினர் படைப் பிரிவு, சி.ஆர்.பி.எப்‌. படைப் பிரிவு உள்ளிட்ட 49 படைப்பிரிவுகள் மிடுக்குடன் அணிவகுத்து வந்து வணக்கம் செலுத்தினர். அதை ஆளுநர் ரவி ஏற்றுக்கொண்டார்.

   

தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் (கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கைச்சிலம்பம், நையாண்டி மேளம்) மற்றும் ராஜஸ்தான் கல்பேலியா நடனம், மகாராஷ்டிரா கோலி நடனம், அஸ்ஸாம் பகுரும்பா நடனம் உள்ளிட்ட ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

22 அலங்கார வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. தொடர்ந்து, தலைமைச் செயலாளர் இறையன்பு, அணி வகுப்புத் தளவாய் விங் கமாண்டர் பி.சி.கர்நாடக்கை, ஆளுநர் ரவிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கலைநிகழ்ச்சிகள் முடிந்தபிறகு, 9.25 மணி அளவில் ஆளுநர் ரவி புறப்பட்டு சென்றார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி அனுப்பி வைத்தார். அவரை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் புறப்பட்டு சென்றார்.

MUST READ