எ.வ.வேலு கோரிக்கைக்குப் பதிலடி; பேரவையில் திமுக உறுப்பினர்கள் கடும் அமளி
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், அதன் நிறைவு நாளான இன்று (08-09-2026) பேரவையில் கடுமையான விவாதங்களும் அமளியும் நிலவின. கூட்டத்தொடரின் இறுதி நாளில் போக்குவரத்து, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், திட்டம் மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய அமர்வு தொடங்கியதும், சட்டம்-ஒழுங்கு விவாதம் மற்றும் நேற்று காவலத்துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் விஜய் அளித்த பதிலுரை குறித்து எதிர்க்கட்சி கொறடாவும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார். 
அவைக்குறிப்பில் இருந்து நீக்க எ.வ.வேலு வலியுறுத்தல்
பேரவையில் எ.வ.வேலு பேசுகையில், “சர்க்காரியா கமிஷன் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் மிசா சட்டம் குறித்துப் பேசும்போது முரசொலி மாறனின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியது அவையின் மரபுகளுக்கு மீறிய செயலாகும். பேரவை விதிகளின்படி நீதிமன்ற விசாரணையில் இருக்கும் விஷயங்கள் குறித்தோ, அவையில் இல்லாத நபர்கள் குறித்தோ பேசுவதற்கு இடமில்லை. எனவே, நேற்று முதல்வர் பேசிய உரையில் காவலத்துறை தவிர்த்து, ஆதாரமில்லாமலும் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்ட அனைத்துக் குறிப்புகளையும் அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி பதிலடி
எ.வ.வேலுவின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளித்து அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காரசாரமாகப் பேசினார், “முதல்வர் நீதிமன்றத்தைப் பற்றியோ, நிலுவையில் இருக்கும் விசாரணை பற்றியோ பேசவில்லை. எங்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கிறதோ, அதை மட்டுமே சுட்டிக்காட்டிப் பேசினார். சர்க்காரியா கமிஷன் பற்றிய பதிவுகள் ஏற்கனவே இந்தச் சட்டமன்ற அவையில் இருக்கின்றன. முன்னாள் முதல்வர் கலைஞர் எங்கெல்லாம் பணம் பெற்றாரோ, அவை அனைத்தும் அந்த அறிக்கையில் தெளிவாக இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே பதிவில் உள்ளதைத்தான் முதல்வர் சுட்டிக்காட்டினார். சர்க்காரியா கமிஷனில் 6 முக்கியக் குற்றச்சாட்டுகள் உள்ளன; அதன் அடிப்படையில்தான் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தியது.
அதேபோல், மிசா காலம் குறித்து இங்குப் பலமுறை பேசப்பட்டுவிட்டது. மிசா காலகட்டத்தில் திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்கு, பெண்கள் தொடர்பான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கைது செய்யலாம். ஆனால், கைது செய்யப்பட்ட அனைவரும் அரசியல் காரணங்களுக்காகவே மிசாவில் கைது செய்யப்பட்டார்கள் என்று கூறிவிட முடியாது. 20 அம்சத் திட்டத்தை அறிவித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றி, ’21 அம்சத் திட்டம்’ என்று கூறி அவதூறாகப் பேசியவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது போன்ற பல கருத்துகளைப் பேசியதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார்.
பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்ற பதிவுகளும் உள்ளன. அதைத் தவிர மிசாவில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என எந்தக் குறிப்பிலும் இல்லை. தேவையில்லாமல் பழைய வரலாறுகளைக் கிளறி தங்களை தாங்களே தரம் தாழ்த்திக் கொள்கிறீர்கள். அன்றைக்கு அவர் என்ன செய்தாரோ, அதைத்தான் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரும் செய்துகொண்டிருக்கிறார். அந்த நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் முதல்வர் மிகவும் கண்ணியமான முறையில் அறிவுறுத்தினார்” என்று நிர்மல்குமார் பதிலளித்தார்.
திமுக உறுப்பினர்கள் கடும் அமளி
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே, அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கடும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இதனால் பேரவையில் கடுமையான கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு அமளி நிலவியது.
