நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை எனத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை ஏன் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உடனடியாக FIR பதிவு செய்வதுடன், ‘அகல் விளக்கு’ பதிப்பகத்தின் வங்கிக் கணக்கையும் முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

புத்தகக் கொள்முதலில் ஈடுபட்ட அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு
கடந்த இரண்டு ஆண்டுகளில் நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளின் முழுமையான பட்டியலைத் தயாரித்து, நாளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், புத்தகக் கொள்முதல் தொடர்பான ஆவணங்களில் யார் யார் கையெழுத்திட்டுள்ளனர், அதற்கான பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்
இந்த விவகாரத்தில் எந்த அரசையும் குறை கூற விரும்பவில்லை என்றும், இதற்குக் காரணம் அதிகாரிகள்தான் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புத்தகக் கொள்முதல் தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், அவற்றைப் பின்பற்றாமல் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தை அரசியலாக்காமல், புத்தகக் கொள்முதல் நடைமுறைகள், அதில் கையெழுத்திட்ட அதிகாரிகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான முழுமையான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள அறிக்கையைத் தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!
