Homeசெய்திகள்தமிழ்நாடுஅடிப்படை வசதி கோரியவரைத் தாக்கியதாக துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது புகார் – எஸ்டிபிஐ கடும்...

அடிப்படை வசதி கோரியவரைத் தாக்கியதாக துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது புகார் – எஸ்டிபிஐ கடும் கண்டனம்!

-

- Advertisement -

கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் – ரவிசங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அச. உமர் பாரூக் வலியுறுத்தல்அடிப்படை வசதி கோரியவரைத் தாக்கியதாக துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது புகார் – எஸ்டிபிஐ கடும் கண்டனம்!

திருச்சி மாவட்டம் துறையூரில் அடிப்படை வசதிகள் தொடர்பாகக் கோரிக்கை வைக்கச் சென்ற பொதுமக்கள் மீது, துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்குதல் நடத்தியதாக எழுந்துள்ள புகாருக்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், புகார் குறித்து நியாயமான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

அடிப்படை வசதி கோரிய கார்த்திக் மீது தாக்குதல் எனப் புகார்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் அச. உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது பகுதியில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து முறையிடச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர், கார்த்திக்கைத் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி, எட்டி உதைத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண வேண்டிய பொறுப்பில் இருப்பவர், கோரிக்கை வைக்க வந்த ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காவல்துறை முன்னிலையில் மிரட்டல் விடுத்ததாகவும் குற்றச்சாட்டு

மேலும், தனக்கு நேர்ந்த அநீதியையும் காயங்களையும் மறைக்கும் வகையில், காவல்துறை அதிகாரி முன்னிலையிலேயே தனது குடும்பத்தினரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி, கட்டாயப்படுத்திப் பொய்யான வாக்குமூலத்தை வீடியோவாகப் பதிவு செய்ததாக கார்த்திக் கூறியிருப்பதாக உமர் பாரூக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே, ஆளுங்கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குத் துணைபோனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரவிசங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்கள் என்றும், பொதுமக்களைத் தாக்குவதற்கோ அச்சுறுத்துவதற்கோ அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் உமர் பாரூக் தெரிவித்துள்ளார்.

எனவே, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் காவல்துறை மிரட்டல் தொடர்பாக எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது தமிழக அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குப் பாதுகாப்பு கோரிக்கை

பாதிக்கப்பட்ட கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நியாயமான விசாரணை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அச. உமர் பாரூக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும்; துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கார்த்திக் மீண்டும் பேட்டி!

MUST READ