செங்கல்பட்டு கள்ளச்சாராயம் பலி 8ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும், வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா இருவரும் மே.13 தேதி, போலி மதுபானம் குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதேபோல், பெருங்கரணை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகிய மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், சின்னத்தம்பி, வசந்தா இருவரும் உயிரிழந்தனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலி ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருங்கரணை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (60) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் . இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) , ஜம்பு (60), முத்து (64) ஆகிய மூவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.