

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 70 இடங்களில் சுமார் நான்கு நாட்களாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது, வருமான வரித்துறை சோதனையில் ரூபாய் 3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, விளக்கம் அளித்த ஜி ஸ்கொயர் நிறுவனம், “அரசியல் கட்சி மற்றும் அரசியல் கட்சியின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு இல்லை என்பதை வருமான வரித்துறை அதிகாரிகளே உறுதிப்படுத்தியுள்ளனர்.
எங்கள் நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூபாய் 38,000 கோடி என வெளியான தகவல்கள் தவறானது. தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, தவறாக வழிகாட்டுபவை. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தங்களது நிறுவனத்தின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ரொக்கம் கைப்பற்றப்படவில்லை என்பதை வருமான வரித்துறையினரிடமே உறுதிச் செய்துக் கொள்ளலாம். வருமான வரித்துறையின் சோதனைக்கு எங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கியது. இந்த சோதனை வருமான வரித்துறையின் வழக்கமான நடவடிக்கை தான்.
எங்கள் வணிக நடைமுறைகளில் உயர் நெறிமுறை தரத்தை எப்போதும் கடைபிடித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.