இந்தியாவிலிருந்து தலைமறைவாகி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் ‘கைலாசா’ என்ற தனித் தீவு நாட்டை உருவாக்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பி வரும் நித்யானந்தா, மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக எழுந்துள்ள தகவல் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
முதலமைச்சருடன் விசித்திரக் குழு சந்திப்பு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அண்மையில் ஒரு விசித்திரமான ஆன்மீகக் குழுவினர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். தங்களைக் ‘கைலாசா’ ஆன்மீகத் தூதரகத்திலிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பிரதிநிதிகள், முதலமைச்சருக்கு ஒரு சிறப்புப் புத்தகத்தைப் பரிசாக வழங்கியுள்ளனர். புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த பிறகே, அவர்கள் நித்யானந்தாவின் சீடர்கள் என்பதும், கைலாசா தூதரகத்தின் பெயரால் வந்துள்ளனர் என்பதும் முதலமைச்சருக்குத் தெரியவந்துள்ளது.

புதுச்சேரிக்கு வரத் திட்டம்
புதுச்சேரியின் ஏம்பளம் கிராமத்தில் நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள தியானபீடத்தின் கைலாச ஞான பீடத்திற்கு விரைவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளூர் மக்களால் தாக்கப்பட்ட இந்த ஆசிரமம், தற்போது முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காகவே நித்யானந்தா பல ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாகப் புதுச்சேரிக்கு வரவுள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசிடம் அனுமதி?
“அவர் கைலாசாவில் அல்லவா இருக்கிறார், எப்படி வர முடியும்?” என்று முதலமைச்சர் ரங்கசாமி கேள்வி எழுப்பியதற்கு, நித்யானந்தா இந்தியா திரும்புவதற்கான சட்டப்பூர்வப் பயண ஏற்பாடுகள் மற்றும் அனுமதிகள் குறித்து மத்திய அரசிடம் ஏற்கனவே முறையான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாகத் தூதுக் குழுவினர் பதிலளித்துள்ளனர். மேலும், விழாவில் முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்றும், புதுச்சேரிக்கு வரும் நித்யானந்தாவிற்கு அரசு ரீதியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வரின் நிதானமான பதில்
அனைத்து விவரங்களையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, “முதலில் அவர் வரட்டும், வந்த பிறகு மற்ற விபரங்களை அரசு ரீதியாக முடிவு செய்து கொள்ளலாம்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார். நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பி ஓடிய நித்யானந்தா, மத்திய அரசின் அனுமதியோடு மீண்டும் தமிழக எல்லைக்கு அருகில் கால் பதிக்கப் போகிறார் என்று பரவும் இந்தச் செய்தி, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தினம் இன்று கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
