மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு அனுப்பிய கோரிக்கையை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.


கோவை நகரம் மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமாகவும், மதுரை நகரம் தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் சுற்றுலா தலமாகவும் விளங்குவதால், இவ்விரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் அவசியம் எனத் தமிழக அரசு வலியுறுத்தி வந்தது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு சாக்கு
இதற்காகத் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கடந்த திமுக அரசு ஒன்றிய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்தது. எனினும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை எனக் கூறி ஒன்றிய அரசு தொடக்கத்தில் நிராகரித்தது.
அதைத் தொடர்ந்து, இவ்விரு நகரங்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் போக்குவரத்துத் தேவைகளைச் சுட்டிக்காட்டி, திட்டத்தின் அவசியத்தை விளக்கித் தமிழக அரசு சார்பில் மீண்டும் ஒன்றிய அரசுக்கு மறுஆய்வுக் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
மீண்டும் நிராகரித்த ஒன்றிய அரசு
இந்நிலையில், தமிழக அரசின் இந்த மறுஆய்வுக் கோரிக்கையையும் ஒன்றிய அரசு தற்போது மீண்டும் நிராகரித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாவது:
“மதுரை மற்றும் கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த நகரங்களில் மக்கள் தொகை குறைவாகவே உள்ளதுடன், மெட்ரோ ரயில் திட்டத்தால் பெரிய அளவில் பயண நேரம் மிச்சமாகாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.”
மேலும், மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பதிலாக இந்த இரண்டு நகரங்களிலும் உயர்மட்ட (Elevated) அல்லது தரைமட்ட (At-Grade) விரைவுப் பேருந்து போக்குவரத்து அமைப்புகளை (BRTS) ஏற்படுத்திச் செயல்படுத்தலாம் என்றும் ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் இந்தத் தொடர் நிராகரிப்பு இரு நகர மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேட்டில் அலைமோதிய மீன் பிரியர்கள்- விலை குறைவினால் பொதுமக்கள் மகிழ்ச்சி
