சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்பு இந்த மாதம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருவதால் பெற்றோர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் வரும் குழந்தைகளில் 50 முதல் 60 சதவீத குழந்தைகள் சளி இருமலுடன் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானூருக்கு வைரசால் ஏற்படுத்தும் சுவாச பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக சளி மற்றும் இருமல் பாதிப்பு டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு பின்னர் குறைந்து விடும் என்றும் ஆனால் தற்போது அந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு வாரம் வரை சளி இருமல் பாதிப்பு நீடிக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருமல் காய்ச்சல் தொண்டை வலி ஆகியவை நுரையீரல் பாதிப்பின் முந்தைய கட்டம் என்பதால் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
குளிர்ச்சியான தட்ப வெப்பநிலை மற்றும் குழந்தைகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதே நுரையீரல் தொற்றுக்கு காரணம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் பருவநிலை மாற்றத்தால் வைரஸ் தொற்று பரவுவது அதிகரித்துள்ளது.
இதில் காய்ச்சல் இருமலுடன் மூச்சு திணறல் பாதிப்பும் உள்ள ஆறு மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர்.பாதிப்பு அதிகம் உள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வைரஸ் பாதிப்பின் காரணமாக குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவது மிகவும் குறைவாகவே இருந்தாலும் இருமல் சளியுடன் குழந்தைகளுக்கு தொண்டை வலி ஏற்படுவதை காண முடிவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வைரஸ் காரணமாகவும் சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது கண்ட றியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சளி இருமல் தொண்டை வலி, காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள மருத்துவர்கள், இது கொரோனா தொற்று இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு ஐந்து வயது முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் ஃபுளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
