மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள திருக்குடமுழுக்கு விழாவைத் தமிழ் மரபுப்படி நடத்த வேண்டும் என்றும், யாகசாலையில் 50 சதவீத இடத்தைத் தமிழுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, ‘மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன், தமிழக அரசு மற்றும் அமைச்சருக்கு எதிராகப் பல அதிர்ச்சித் தகவல்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்தார்.

தமிழ்ச் சைவப் பண்பாட்டின் அடையாளம் மீனாட்சி கோயில்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியதாவது:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என்பது வெறும் சமயச் சடங்கு தலம் மட்டுமல்ல, பல நூற்றாண்டு காலத் தமிழ்ச் சைவ பண்பாட்டின் அடையாளம் ஆகும். பண்டைய கல்வெட்டுகளில் இத்திருக்கோயிலின் தெய்வங்கள் ‘திரு ஆலவாய் உடைய நாயனார்’, ‘திருக்காமக்கோட்டத்து உடைய நாச்சியார்’ என்றே தமிழ்ப் பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன.
ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல்களால் பாடப்பட்ட தொன்மையான தலம் இது. எனவே, தமிழில் இறைவனைப் போற்றுவது என்பது புதிய கோரிக்கை அல்ல; அது நமது தொன்மையான வழிபாட்டு மரபு என்றார்.
முக்கியக் கோரிக்கைகள்:
மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள் பின்வருமாறு:
50% யாகசாலை தமிழுக்கு: வரவிருக்கும் குடமுழுக்கு விழாவில், மொத்த யாகசாலைகளில் குறைந்தது 50 விழுக்காடு யாகசாலைகளைத் தமிழ் திருமுறை, தமிழ்ச் சைவ மந்திரங்கள் மற்றும் தமிழ் ஆன்மிகப் பாடல்களுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் ஓதுவார்கள் மற்றும் திருமுறை அறிஞர்களுக்கு யாகசாலைக்குள் உரிய பங்கேற்பு வழங்கப்பட வேண்டும்.
வெளிப்படைத்தன்மை: குடமுழுக்குப் பணிகள் சில குறிப்பிட்ட நபர்களுக்கு (பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் போன்றோர்) வழங்கப்படுவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும். வெளிநாடு சென்றால் ஆகம தகுதியை இழப்பார் என்ற சாஸ்திர விதி அனைவருக்கும் பொதுவாகப் பொருந்த வேண்டும்.
நிதிக் கணக்கு விவரம்: குடமுழுக்கிற்காகச் செலவிடப்படும் பல கோடி ரூபாய் நிதி மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ‘டெண்டர்’ (Tender / Quotation) நடைமுறைகள் வெளியிடப்பட வேண்டும். தமிழ் ஓதும் நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே வெளியிட வேண்டும்.
சங்கராச்சாரியார் பெயர் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு மற்றும் மதுரை ஆதீனம் புறக்கணிப்பு!
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அழைப்பிதழ் விவகாரம் குறித்துக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார். மதுரை கோயிலுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாதவரும், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுச் சிறை சென்றவருமான காஞ்சி சங்கர மடத்தின் விஜயேந்திர சரஸ்வதி பெயருக்குக் குடமுழுக்கு விழாவில் முன்னுரிமை அளிப்பதும், பாரம்பரியமிக்க தமிழ்ச் சைவ மடமான மதுரை ஆதீனம் புறக்கணிக்கப்பட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார். அமைச்சர் நிர்மல் குமார் இதற்குப் பதிலளிப்பாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் நிர்மல் குமார் மீது குற்றச்சாட்டு!
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அவர், “மீண்டும் மதப் பிரச்சினை ஏற்பட்டால் அதற்குத் தற்போதுள்ள தவெக அரசின் அமைச்சர் நிர்மல் குமாரும், காவல்துறையுமே முழுப் பொறுப்பு” என்றார். மலையின் மேலே உள்ள தர்காவில் முஸ்லிம்கள் வழிபாடு செய்யக் காவல்துறை தடுத்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், “சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக அமைச்சர் நிர்மல் குமார் செயல்படுகிறாரா? தமிழகக் காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது” எனக் கேள்விகளை எழுப்பினார்.
காவல்துறையின் இத்தகைய ஒருபக்கச் சார்பான நடவடிக்கைகள் தொடர்ந்தால், மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மக்களைத் திரட்டி ஆளும் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எச்சரித்தார்.
