புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புதுச்சேரி மீது எனக்கு தனி பாசமே உண்டு. திராவிட இலக்கியத்தின் தலைநகரம் புதுச்சேரி. திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கும் தேவைப்படுகிறது, புதுவையில் திமுக ஆட்சி விரைவில் அமையும்.புதுச்சேரியில் தற்போது உள்ள ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

புதுச்சேரியில் தற்போது பொம்மை ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. புதுச்சேரியில் மதவாத ஆட்சி உருவாகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான். ஆனால் அது மக்களுக்கான ஆட்சி இல்லை. முதலமைச்சர் ரங்கசாமி நல்லவர்தான் ஆனால் அவர் வல்லவராக இல்லை. ஆளுநர் ஆட்டிப்படைக்கிறார். புதுச்சேரி மீது எனக்கு தனி பாசம் உண்டு, தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் பிரித்து பார்க்க முடியாது. முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் உங்களில் ஒருவனாக பணியாற்றிவருகிறேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் இப்போதே தயாராகி பணியாற்றுவோம்” எனக் கூறினார்.