Homeசெய்திகள்தமிழ்நாடுமக்கள் பதற்றப்பட தேவையில்லை - மா.சுப்பிரமணியன்

மக்கள் பதற்றப்பட தேவையில்லை – மா.சுப்பிரமணியன்

-

- Advertisement -

உருமாற்றம் அடைந்த கொரோனா இந்தியாவில் பரவி வந்தாலும் தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகம் இல்லை என்பதால், பதட்டம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமது துறை அலுவலகத்தில் மக்கள் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பே இல்லாத சூழலும், உயிரிழப்பே இல்லாத நிலையும் இருந்ததை குறிப்பிட்ட அமைச்சர், தற்போது கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது என கூறினார்.

இந்தியாவில் 200-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு, 1000-த்தை கடந்துள்ளதாகவும் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை சோதித்ததில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஏற்கனவே H3N2 என்ற வைரஸ் பாதிப்பு இருந்ததை குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப 1586 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது என்றும் கடந்த 10 நாட்களில் 23833 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் மூலம் 10 லட்சத்து 41 ஆயிரம் பேர் பங்கேற்றதில் 7500 பேர் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் என கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

H3N2 வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் முடிவுக்கு வந்துள்ளதாகவும், தற்போது 15 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகளை உறுதிப்படுத்திக் கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது என அவர் கூறினார். ஒன்றிய அரசு அறிவுறுத்தலுக்கு முன்னதாகவே இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளதை என மா.சுப்பிரமணியன் விளக்கினார்.

கொரோனா பாதித்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாட்டில் பாதுகாப்பான நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் நம்பிக்கையூட்டினார்.

மேலும் 2000 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை சேமித்து வைத்துக் கொள்ளும் அளவிற்கான வசதி, ஆக்சிஜன் இருப்பு, படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்ட தேவைகள் சரியாக உள்ளதென்றும் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

பொதுமக்களின் நோய் எதிர்ப்புசக்தி தன்மை குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்படும் என அவர் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளதாக அமைச்சர் கூறினார்.

மத்திய அரசின் ஆலோசனைகளை முறையாக செயல்படுத்தி வரும் தமிழ்நாட்டில் ஊரடங்கு போட வேண்டிய நிலை தற்போது இல்லை என்பதை தெளிவுபடுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்களிடையே தேவையற்ற பதட்டத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்தார்.

MUST READ