குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே வலது கை அகற்றம்- மருத்துவக் குழு
இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வலது கையை அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டதாக மருத்துவக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி, தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு என ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு செவிலியர்கள் டிரிப்ஸ் போட்டுள்ளனர். இதனையடுத்து ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய நிலையில், அந்த கையே அகற்றப்பட்டது. செவிலியர்களின் அலட்சியத்தால், குழந்தையின் கை அழுகியதாக பெற்றோர் புகார் தெரிவிக்கும் நிலையில், இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.


இது தொடர்பாக மருத்துவக்குழு விசாரணை நடத்திய நிலையில், தற்போது அறிக்கை அளித்துள்ளது. அதில், “இரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வலது கையை அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செலுத்தப்பட்ட மருந்தினாலோ சிகிச்சை முறையாலோ ரத்த நாள அடைப்பு ஏற்படவில்லை. seudomonas எனும் நுண் கிருமியால் குழந்தைக்கு மூளைத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. Venflon ஊசியை தமனியில் போடவில்லை என்பது பெற்றோர், மருத்துவர்களின் வாக்குமூலத்தால் உறுதியானது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


